தூத்துக்குடி சிவன் கோயிலில் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி, ஆக. 24: தூத்துக்குடியில் சிவன் கோயில் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோயில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சிவன் கோயிலில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது, அங்கு வந்த தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் திருமண சான்று தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் பிரேம்குமார், கோயில் ஊழியர் சுப்பையாவை தாக்கியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிந்து பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து சிவன் கோயில் பணியாளர்கள், கோயில் வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், கோயில் ஊழியர் சுப்பையாவை தாக்கிய நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி ஜாமீனில் விட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. அவரால் கோயில் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, நாங்கள் பணி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post தூத்துக்குடி சிவன் கோயிலில் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து பணியாளர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: