தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு புத்தி கூர்மை பல மடங்கு அதிகம்

காரைக்கால், ஆக.24: காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை இணைந்து நல்லாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிராமப்புற செவிலியர் ஜாஸ்மின் வரவேற்றார். மருத்துவ அதிகாரி கனகவல்லி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவர் பவானி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் லட்சுமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பாலின் நன்மைகள் பற்றி சிறப்புரையாற்றினார். ஆரோக்கிய குழந்தை போட்டி மற்றும் தாய்ப்பால் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மருத்துவ அதிகாரி டாக்டர் கனகவல்லி பேசுகையில், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே தலை சிறந்த உணவு, எளிதில் ஜீரணிக்க கூடியது. தொற்றுகள் இல்லாததால் வயிற்றுப்போக்கு உண்டாகாது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை புட்டிபால் குடித்து வளரும் குழந்தையை விட பல மடங்கு புத்தி கூர்மை உடையதாக விளங்குகிறது, தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது என்றார். கிராமப்புற செவிலியர் சங்கீதா பேசுகையில், தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் பால் கொடுப்பதற்கு முன் தாய் தன் மார்பகங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும், தண்ணீரோ அல்லது பழச்சாறு அல்லது நீர் ஆதாரமும் அருந்திவிட்டு பால் கொடுப்பது தாயினுடைய உடலுக்கு நல்லது, தாய்க்கு மன கவலை அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பு குறையும் என கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு கொழு கொழு குழந்தை போட்டி , மற்றும் தாய்ப்பால் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஷா பணியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு புத்தி கூர்மை பல மடங்கு அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: