திருவாரூர் அருகே 2 அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவாரூர், ஆக.22: திருவாரூர் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. திருவாரூர் நகரில்  காமாட்சி அம்மன் கோயில் தெருவில் அமர்ந்து அருள்பாளித்து வரும்  மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் துவக்க நிகழ்ச்சியாக கடந்த 18ம் தேதி துவங்கியது. நேற்று காலை வரையில் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாஅபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவாரூர் அருகே சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் இருந்து வருகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் குடமுழுக்கு திருவிழா நேற்று நடந்தது.

கடந்த 18ம் தேதி மகா கணபதி பூஜை நடைபெற்ற நிலையில் சேந்தனாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கவும், சீரான மழை பெய்து,பயிர்கள் செழிப்பாக வளரவும் வேண்டி படைவெட்டி மாரியம்மனுக்கு அங்குள்ள விநாயகர் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து முளைப்பாரி வழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று, ராஜகோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் காலை 10.30 மணியளவில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post திருவாரூர் அருகே 2 அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: