மதுரையில் கூட்டுறவில் இளைஞர் பங்களிப்பை வளர்ப்பது குறித்த கருத்தரங்கு

மதுரை, ஆக. 15: மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கூட்டுறவில் இளைஞர் பங்களிப்பை வளர்ப்பது’ குறித்த கருத்தரங்கை மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று நடத்தியது. மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், செயலாளருமான ஜீவா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

‘கூட்டுறவு வளர்ச்சி மாதிரி: ஒரு சமூக பொருளாதார பார்வை’ தலைப்பில் மதுரை கல்லூரி பேராசிரியர் மயில்முருகன் உரையாற்றினார். கூட்டுறவுத்துறையில் இளைஞர்களுக்கு உள்ள வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் குறித்து மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக இயக்குநர் எஸ்.தர்மராஜ் உரையாற்றினார். தொடர்ந்து பயிற்சி துணைப்பதிவாளர்கள் போட்டி தேர்வு மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி பேசினர்.

மேலும், ‘இளைஞர் பங்களிப்பு மற்றும் தற்காலச் சூழல், எதிர்பார்ப்புகள்’ பற்றிய தங்களது புரிதலை விளக்கும் வகையில் மாணவர்களும் உரை நிகழ்த்தினர். நிறைவு விழா சிறப்பு விருந்தினராக சென்னை பதிவாளர் அலுவலக இணைப்பதிவாளர் (சட்டப்பணிகள்) தயாளன் பங்கேற்று பேசினார். கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக விரிவுரையாளர் அழகுப்பாண்டியன் நன்றி கூறினார். விரிவுரையாளர் கதிரவன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post மதுரையில் கூட்டுறவில் இளைஞர் பங்களிப்பை வளர்ப்பது குறித்த கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: