கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 18ம் தேதி பெரம்பலூர் , குன்னத்தில் சிறப்பு பட்டா முகாம்

பெரம்பலூர்,ஆக.15: பெரம்பலூர் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற 18ம்தேதி 2 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற உள்ளது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜுன் மாதம் முதல், 2024 ஜுன் மாதம் வரை நடை பெறுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டு மாவட்டத் தோறும் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற உள்ளது.

இதன் படி பெரம்பலூர், வேப்பந் தட்டை, ஆலத்தூர் ஆகிய மூன்று தாலுக்காக்களுக்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குன்னம் தாலுக்காவிற்கு குன்னம் தாலுக்கா அலுவலகத்திலும் சிறப்பு பட்டா முகாம்கள் வருகிற 18ம் தேதியன்று நடை பெறவுள்ளது.மேற்படி சிறப்பு பட்டா முகாம்களில் வீட்டுமனைப் பட்டா மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்கள், வருவாய் ஆவணங்களில் பிழைதிருத்தம் மேற் கொள்ளுதல் தொடர்பான மனுக்கள், வருவாய்த் துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
இந்த சிறப்புப் பட்டா முகாமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 18ம் தேதி பெரம்பலூர் , குன்னத்தில் சிறப்பு பட்டா முகாம் appeared first on Dinakaran.

Related Stories: