தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதளம் அறிமுகம் தொலைந்து போன செல்போனை 24 மணி நேரத்தில் முடக்கலாம்: தமிழகத்தில் 25,135 சிம்கார்டுகள் முடக்கம்; மாநில சைபர் க்ரைம் போலீஸ் தகவல்

சென்னை: தொலைந்து போன செல்போன்களை 24 மணி நேரத்தில் முடக்கும் வகையில், ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் 25,135 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது என்று மாநில சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். செல்போன்கள் தொலைந்து போனால் அந்த செல்போனை கண்டுபிடிக்கும் வகையில் ஒன்றிய தொலைத்தொடர்பு துறை ‘சீயர்’ (சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டி ரிஜிஸ்டர்) என்ற புதிய இணையதளம் ஒன்று உருவாக்கி உள்ளது. இந்த இணையதளம் மூலம் காவல்துறையினர் மற்றும் செல்போனை இழந்தவர்கள், அதன் ஐஎம்இஐ நம்பரை வைத்து தொலைந்து போன செல்போனை 24 மணி நேரத்தில் முடக்க முடியும்.

அவ்வாறு முடக்கப்பட்ட செல்போனில் புதிய சிம்கார்டுகளை வைத்து செல்போனை இயக்கினால், சம்பந்தப்பட்ட செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு எஸ்எம்எஸ் செல்லும். அதேபோல செல்போன் தொலைந்ததாக புகார் அளித்த காவல் நிலையத்துக்கும் இந்த தகவல் செல்லும். இதனால் இனி செல்போன்கள் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இனி கவலைப்பட தேவையில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் செல்போனை பறிகொடுத்த நபரோ அல்லது காவல் நியைத்தில் புகார் அளிக்கப்பட்ட பிறகு காவல் அதிகாரிகளோ சம்பந்தப்பட்ட இணையதளத்தில் செல்போனின் ஐஎம்இஐ பதிவு செய்தாலே போதும். திருடு போன செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது.

தொலைந்து செல்போன் மற்றும் திருடப்பட்ட செல்போனின் தற்போதையை நிலைய அறிந்து கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் CEIR என்ற இணையதளத்தை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து அதில், www.sancharsaathi.gov.in என்ற முகவரியில் சென்று ஐஎம்இஐ நம்பரை பதிவேற்றம் செய்து தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் க்ரைம் காவல் துறையினருக்கு ஒன்றிய தொலை தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து புதிய இணையதளத்தை பயன்படுத்துவதற்கான ‘லாகின் ஐடி’கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சிறப்பு அம்சம் தற்போது காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதால், தொலைந்து போன மற்றும் திருடுபோன செல்போன்கள் இருக்கும் இடங்கள் மற்றும் செல்போன் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்ப வசதியுடன் காவல்துறையினர் மூலமாக செல்போனை மீட்க ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தலாம். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இந்த புதிய இணையதளம் மூலமாக தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட செல்போனில் புதிதாக பயன்படுத்தப்பட்ட 25,135 சிம்கார்டுகள் மாநில சைபர் க்ரைம் போலீசார் மூலம் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நாடு முழுவதும் தொலைந்து போனதாக 7 லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் 24 மணி நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக நாடுமுழுவதும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. அதோடு இல்லாமல் கூடுதல் அம்சமாக பழைய செல்போன் வாங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட செல்போன் எவ்வளவு பழமையான செல்போன் என்பதை ஐஎம்இஐ நம்பர் மூலம் இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த இணையதளம் மூலம் உங்கள் பெயரில் எத்தனை செல்போன் சிம்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதளம் அறிமுகம் தொலைந்து போன செல்போனை 24 மணி நேரத்தில் முடக்கலாம்: தமிழகத்தில் 25,135 சிம்கார்டுகள் முடக்கம்; மாநில சைபர் க்ரைம் போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: