போலி கையெழுத்து விவகாரம் எம்பியின் பதவியை பறிக்க பாஜ சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: எம்.பி. ராகவ் சத்தாவின் பதவியை பறிப்பதற்காக டெல்லி சேவைகள் மசோதாவில் அவர் போலி கையெழுத்திட்டதாக பாஜ கூறுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி சேவைகள் மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் 29 வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் நிறைவேறியது. முன்னதாக டெல்லி சேவைகள் மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் எனக்கோரி ஆம்ஆத்மி எம்பி ராகவ் சத்தா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினார்.

அந்த தீர்மான நோட்டீசில், பாஜக எம்பிக்கள் எஸ்.பாங்னான் கொன்யாக், நர்ஹரி அமீன், சுதன்ஷு திரிவேதி, அதிமுகவின் தம்பிதுரை, பிஜூ ஜனதா தளம் எம்பி சஸ்மித் பத்ரா ஆகியோரின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், 5 எம்பி.க்களின் கையெழுத்துகளையும் போலியாக போட்டு அனுப்பியதாக ராகவ் சத்தா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்து பேசிய ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், “தேர்வு குழுவுக்கு கையெழுத்தில்லாமல் எந்த எம்பி.யும் பெயர்களை பரிந்துரைக்கலாம். ராகவ் சத்தா போலி கையெழுத்திட்டதாக பொய்யான மற்றும் தவறான வதந்தி மூலம், ராகுலின் எம்பி. பதவியை பறித்தது போன்று, சத்தாவின் எம்பி. பதவியை பறிக்க பாஜ திட்டமிடுகிறது.

பாஜ மிகுந்த அதிகாரத்துடன் இருப்பதால் அவர்களால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் அதற்காக அவர்களை கண்டு ஆம் ஆத்மி பயப்படாது,’’ என்று தெரிவித்தார். தம்பித்துரை புகார்
அதிமுக எம்பி தம்பிதுரை கூறுகையில், ‘ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா அளித்த தீர்மானத்தில் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் நான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் எனது கையெழுத்தை யாரோ முறைகேடாக போட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்துள்ளேன்’ என்றார்.

The post போலி கையெழுத்து விவகாரம் எம்பியின் பதவியை பறிக்க பாஜ சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: