தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்றஜீப் டிரைவரை தாக்கிய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

கம்பம், ஆக. 8: தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிரைவரை தாக்கிய கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் சவுடம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவர், தனக்கு சொந்தமான ஜீப்பில் தினமும் ஏலத்தோட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, கேரளா மாநிலம் ஆமையார் அருகே உள்ள ஏலத்தோட்டத்திற்கு சென்று வருகிறார். நேற்று முன் தினம் வேலை முடிந்து வழக்கம்போல் பெண் தொழிலாளர்களை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கம்பத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சேற்றுக்குழி பகுதியில் ஜீப் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஜீப்பிற்கு வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த அந்த ஜீப்பில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 4 பேர் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பெண் தொழிலாளர்களையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இதுகுறித்து கம்பம்மெட்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்குமாரை மீட்டனர்.இதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், கேரளா மாநிலம் கருணாபுரத்தைச் சேர்ந்த ஷாலி, வினோத், தாமஸ், ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தமிழக-கேரளா எல்லையான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

The post தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்றஜீப் டிரைவரை தாக்கிய கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: