9-வது தேசிய கைத்தறி தினம் நெசவாளர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

திருவாரூர், ஆக. 5: 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கைத்தெறி நெசவாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் நெசவாளர்களின் பெருமையை நாடறியச் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறிதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் அம்மையப்பன், கூறைநாடு, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு ஒரு முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி குழும வளர்ச்சி திட்டம், நெசவாளர் முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு இந்த 9வது தேசிய கைத்தறி தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post 9-வது தேசிய கைத்தறி தினம் நெசவாளர்களுக்கு கலெக்டர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: