கான்கிரீட் தளம், பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு; கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: கோபி அருகே பரபரப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் அஞ்சூர் மங்கலப்பட்டி வரை சுமார் 200 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தவிர கசிவுநீர் திட்டங்கள் மூலமாக சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாக பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் வாய்க்கால் அமைக்கப்பட்டதில் இருந்து முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்படாத நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.900 கோடி மதிப்பீட்டில் வாய்க்காலின் இரு கரையிலும் பக்கவாட்டு சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் மூலமாக மறைமுகமாக பாசன வசதி பெற்று வரும் விவசாய நிலங்களும், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விடும் என கூறி இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே 8க்கும் மேற்பட்ட இடங்களில் பாலம் அமைக்கும் பணியும், அதன் அருகே பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணியும் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த பணி முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக கட்டுமான பணிகளை முடித்து பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், வாய்க்காலில் கான்கிரீட் பக்கவாட்டு சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பாசன விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், மோகன கிருஷ்ணன் கமிட்டி அறிக்கையை முன்வைத்து தயாரிக்கப்பட்ட நவீனப்படுத்துதல், புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் என்ற திட்டத்தின் அரசாணை எண் 276ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகள் இறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கான்கிரீட் தளம், பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு; கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: கோபி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: