தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றார். அப்போது தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு இந்த பகுதியில் அடுத்து வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு கட்டமைப்பு பணிகளை உருவாக்கி புதிய கால்வாய்கள், தார்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பணிகளை எம்பி கனிமொழி,அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துரிதப் படுத்தினர். மேயர் ஜெகன் பெரியசாமியும் இடைவிடாமல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், நேர்த்தியாக செய்யவும் ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல அடுக்கு மாடி கட்டிடத்துடன் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய பஸ் நிலையத்தை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலைய பணிகளானது நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி இந்த பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும் இந்த வளாகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் முறையாக செய்யப்பட்டுள்ளது’’ என்றார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சரவணன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: