காலத்தின் பெருமை சொல்லும் கீழடி, வெம்பக்கோட்டை போல… சிவகாசியில் ஒரு ‘அருங்காட்சியக வீடு’

* 60,000 நாணயங்கள், 500 மரச்சிற்பங்கள்
* அள்ள, அள்ள பழங்காலப் பொருட்கள்

சிவகாசி : சிவகங்கைக்கு ஒரு கீழடி போல, விருதுநகருக்கு ஒரு வெம்பக்கோட்டை திகழ்கிறது. இங்கு பாய்ந்தோடும் வைப்பற்றின் கரையோர பகுதிகளில் முதுமக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக விளங்கும் தொல்லியல் பொருட்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கீழடியை போல் வெம்பக்கோட்டையில் அரசு சார்பில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை போல் சிவகாசியிலும் ஒரு இடத்தில் தொல்பொருட்கள் குவிந்து கிடக்கிறது.

அந்த வீடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனந்தப்ப நாடார் தெருவில் உள்ளது. அங்கு வசிப்பவர் ராஜராஜன். தொல்பொருள் ேசகரிப்பாளரான இவர், வீட்டை ‘அருங்காட்சியகம்’ என்று சொல்லும் அளவுக்குத் பழங்காலப் புழங்கு பொருட்களையும், மன்னர்கள் காலத்து அரும்பொருட்கள், பழங்கால நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். அதனால், விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பிலோ, தனியார் அமைப்பு சார்பிலோ எங்கு பழங்கால பொருட்களின் கண்காட்சி நடந்தாலும், இவர் சேகரித்து வைத்துள்ள தொல்பொருட்கள் கண்டிப்பாக இடம் பெறும்.

இதுகுறித்து ராஜராஜன் கூறுகையில், ‘‘எங்க அப்பா, தாத்தா காலத்திலிருந்து பழமையான பொருள்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் காலத்தில் மாட்டுவண்டியில் கிராமம் கிராமமாக சென்று பிண்ணாக்கு வியாபாரம் செய்தார்கள். அப்போது, கண்ணில்படும் பழமையான பொருட்களுக்கு, உரிய விலை கொடுத்து வாங்கி சேகரித்து வந்துள்ளனர்.

மண், மரம், இரும்பு, பித்தளை, வெள்ளி, தங்கத்தினாலான பொருள்களையும், கி.மு சந்திரகுப்தர் காலம் முதல் தற்போது வரை 60,000 நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளோம். நானும் கிடைக்கும் பொருள்களை எல்லாம் சேகரித்து, 2,000க்கும் மேற்பட்ட பழமையான பொருள்களைப் பாதுகாத்து வருகிறேன். மன்னர்கள் கால முத்திரை மோதிரங்கள், போர்வாள், வேலைப்பாடுகள் நிறைந்த கருவூலச்சாவி, அரச குடும்பப் பெண்கள் குளித்ததும் தலையைக் காய வைப்பதற்காக புகைபோடப் பயன்படுத்தும் யாழி தூபக்கால், ஐம்பொன்னால் ஆன நகைப்பெட்டி, 400 ஆண்டுகளுக்கு முந்தைய பன்னீர்சொம்புகள் என ஏராளமாக உள்ளது.
இந்தியாவில் இதுவரையில் கிடைத்த நாணயங்களிலேயே மிகப்பழமையானதாகக் கருதப்படுகிற ‘கப்’ வடிவ வெள்ளி நாணயம், இலங்கையை வெற்றிகொண்டதன் நினைவாக ராஜராஜசோழன் வெளியிட்ட நாணயம், சுந்தரபாண்டியன், கிருஷ்ண தேவராயர் கால நாணயங்கள் தொடங்கி, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் புழக்கத்தில் இருந்த இந்திய நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளேன்.

500க்கும் அதிகமான மரச்சிற்பங்களை பாதுகாத்து வருகிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் ‘பளீச்’ மாறவே மாறாது. இதுபோன்ற பழங்கால பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொண்டால் நம் பாரம்பரியமும், பண்பாட்டையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியும். அதற்காகத்தான் அவ்வப்போது பழங்கால பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து தொல்பொருட்களை எல்லாம் காட்சிப்படுத்தி வருகிறேன். மாணவர்களும் இதுபோன்ற பழங்கால பொருட்களை கண்டால் அவற்றை சேகரித்து, ஆய்வு செய்து வரலாற்றை படிக்க வேண்டும்’’ என்றார்.

The post காலத்தின் பெருமை சொல்லும் கீழடி, வெம்பக்கோட்டை போல… சிவகாசியில் ஒரு ‘அருங்காட்சியக வீடு’ appeared first on Dinakaran.

Related Stories: