அப்போ இது ரோடு இல்லையா பாஸ்… ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய ஆசாமி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் தாழேச்சொவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது அந்தக் காரை ஓட்டிய நபர் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் காரை இறக்கினார். பின் சிறிது தூரம் தண்டவாளத்தில் அந்தக் கார் சென்றது. இதனைக்கண்டதும் அந்த வழியாக சென்ற பலரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு காரை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போதுதான் அந்த காரை ஓட்டிய நபர் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்தது தெரியவந்தது.

அந்த நபரை தட்டி எழுப்பிய போதிலும் அசால்ட்டாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள் காரை தண்டவாளத்தில் இருந்து நகர்த்த முயன்றனர். ஆனால் கார் வசமாக சிக்கிக் கொண்டதால் அங்கிருந்து கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை. இதுகுறித்து கேட் கீப்பருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் அந்தக் காரை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அந்த நபர் கண்ணூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பதும், நன்றாக குடித்துவிட்டு எங்கே காரை ஓட்டி செல்கிறோம் என தெரியாத அளவுக்கு காரை ஓட்டியதும் தெரியவந்தது.

சாலையில்தான் காரை ஓட்டி செல்கிறோம் என ஜெயபிரகாஷ் நினைத்தாராம். இதையடுத்து குடி போதையில் இருந்த ஜெயபிரகாஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காரை கைப்பற்றினர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் ஒரு ரயில் அந்த வழியாக கடந்து சென்றது. தக்க சமயத்தில் காரை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post அப்போ இது ரோடு இல்லையா பாஸ்… ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: