துவங்கி 2 மாதமாகியும் மண் அள்ள தாமதம் மந்தகதியில் கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி விவசாயிகள் சங்கத்தினர் மாற்று யோசனை

ஸ்பிக்நகர், ஜூலை 20: கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி துவங்கி 2 மாதமாகியும் மண் அள்ளுவதில் தாமதம் நீடிக்கிறது. இதனால் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தினர், மாற்று யோசனையும் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது. வைகுண்டம் வடகால் பாசனத்தில் கடைசியாக இக்குளம், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெள்ள காலங்களில் கோரம்பள்ளம் குளத்துக்கு வரும் உபரிநீர், 24 மதகுகள் மூலம் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 12 அடி ஆழமும், 7.5 கிமீ சுற்றளவும் கொண்ட கோரம்பள்ளம் குளம், 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால், 8 அடி உயரத்திற்கு மேல் மணல் குவிந்து காணப்படுகிறது. இதனால் போதிய தண்ணீரை தேக்க முடியாமல் ஆண்டுதோறும் உபரியாக 13 டிஎம்சி. தண்ணீர் வரை கடலுக்கு வீணாக செல்கிறது.

இதன் காரணமாக இக்குளத்தை நம்பி 2,262 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண் தொழில் செய்து வரும் கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு, சிறுபாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று கோரம்பள்ளம் குளத்தை தூர்வார ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 24 மதகுகள் கொண்ட கண்மாய் அருகே 2 ஜேசிபிகள் மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி, ஒரு மாத காலமாக நடைபெற்றது. அதன் பின்னர், செம்மண்களை 2 ஜேசிபிகள் மற்றும் 5 லாரிகள் மூலம் அள்ளி கரைகளில் பரப்பி வருகின்றனர். பணிகள் துவங்கி 2 மாதங்களாகியும் குளத்திற்குள் மண்ணை அள்ளும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மந்த கதியில் பணிகள் நடப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் பூபதி தலைமையில் நிர்வாகிகள் தானியேல், கந்தசாமி என்ற சின்னக்குட்டி, ரகுபதி, திருமால், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கோரம்பள்ளம் குளத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், கோரம்பள்ளம் குளத்தில் தூர்வாரும் பணி தொடங்கி 2 மாதங்களுக்கு மேலாகியும், இன்று வரை ஒரு லாரி மண் கூட அள்ளப்படவில்லை. மழைக்காலம் நெருங்கி வருவதால் தூர்வாரும் பணிகள் நடைபெறாவிட்டால் தண்ணீரை தேக்குவது வாய்ப்பில்லாமல் போய் விடும்.
குளத்தில் அள்ளப்படும் மண்ணை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே சிப்காட் இடத்தில் கொட்டுவதற்கான அனுமதிக்கு காத்திருக்காமல் கண்மாய் பகுதியிலுள்ள மண்ணை எடுத்து, உள்ளேயே மேல்பக்கம் சுமார் 250 மீட்டர் தூரம் தள்ளி குவித்தால் தூர்வாரும் பணி ஓரளவாவது முடிவடையும். இதனால் குளத்தின் கிழக்கு பகுதி ஆழமாகி, பாதி குளத்திலாவது முழு அளவு தண்ணீரை சேமித்து வைக்கலாம், என்றனர்.

The post துவங்கி 2 மாதமாகியும் மண் அள்ள தாமதம் மந்தகதியில் கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி விவசாயிகள் சங்கத்தினர் மாற்று யோசனை appeared first on Dinakaran.

Related Stories: