மதுரை, ஜூலை 17: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி, மதுரை காந்தி மியூசியத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மதுரை காந்தி மியூசியம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் காந்தி மியூசியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதுடன், சீரமைப்பு மற்றும் மேம்பாட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இந்தியாவின் பழமையான காந்தி அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து உலக தமிழ் சங்கத்தில் அமைந்துள்ள கருத்தரங்க கூடங்கள், ஆய்வரங்கங்கள், பார்வையாளர் அரங்கம் மற்றும் நூலகம் உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள சங்கத்தமிழ் காட்சிக்கூடத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் அமைச்சர் பார்வையிட்டு, அதனை சிறப்பாக பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் காந்நி மியூசியம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post ரூ.6 கோடியில் நடக்கிறது காந்தி மியூசிய சீரமைப்பு பணிகள் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு appeared first on Dinakaran.