கொடைக்கானல் அருகே ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பள்ளங்கி கிராம பகுதிக்கு செல்லக்கூடிய ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் அங்குள்ள மக்கள் கிராமத்தை விட்டு வெளிய வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பள்ளங்கி குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. இக்கிராமத்திற்கு செல்லும் வழியாக பூம்பாறை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றை கடந்து செல்ல சுமார் 6 மாதத்திற்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் இணைந்து தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து கிராமத்திற்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பள்ளங்கி கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பூம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. மேலும் காற்றுடன் கூடிய கனமழை தொடர்வதாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் தகவல்களை பரிமாற முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மழை நின்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடித்திருப்பதால் கிராம மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை ஆற்றை கடந்து விற்பனை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post கொடைக்கானல் அருகே ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: