கொள்ளிடம் ஆற்றில் அளக்குடியில் கரையில் நிரந்தரமாக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்

 

கொள்ளிடம்,ஜூலை 10: கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையையொட்டி கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆறு நேராக சென்று அளக்குடி கிராமத்தில் கரையில் மோதி திரும்புகிறது. மேட்டூரிலிருந்து தண்ணீர் அதிகபட்சமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றும்போது அளக்குடி கிராமப் பகுதியில் கரையின் உறுதித் தன்மையை கருதி எச்சரிக்கை விடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. கொள்ளிடம் அருகே ஆற்றில் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, மற்றும் வெள்ளமணல், வடரங்கம் ஆகிய திட்டுப் பகுதிகளில் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது மூழ்கடிக்கும் நிலை ஏற்படுவதால் திட்டு கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அளக்குடியில் ஆற்றின் கரையில் தண்ணீர் மோதி செல்வதால் அது மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சீறி பாய்ந்து சென்றதால் அளக்குடியில் சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு ஆற்றின் கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது.

கரையிலும் உடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அனைத்து துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று உடைந்த கரை பகுதியை பனை மரங்கள், மரத்துண்டுகள் மற்றும் செங்கல்லை போட்டும் அடைத்தனர். இது தற்காலிகமானதாகும். ஆனால் அளக்குடி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதி தண்ணீர் மோதி திரும்பக் கூடிய இடமாக இருந்து வருவதால் எளிதில் உடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்ற மாதம் நீர்வளத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி கிராமம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீர் மோதி திரும்பும் கரைக்கு எதிர்ப்பகுதியில் இடது கரையின் அருகே அமைந்துள்ள மண் மேட்டை அகற்றினால் வலது கரை பகுதியில் தண்ணீர் மோதும் வேகம் குறைவதுடன் கரை உடைப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று முடிவு செய்து அதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த முயற்சி நடைபெற்று வந்தாலும், உடைப்பு ஏற்பட்ட அந்த இடத்தில் நிரந்தரமாக பழைய நிலைமையில் இருந்ததுபோல் காண்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் ஆற்றில் அளக்குடியில் கரையில் நிரந்தரமாக கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: