நாகப்பட்டினம் / மயிலாடுதுறை 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் புத்தூரில் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அருகே புத்தூர் ரவுண்டானாவில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தங்க குழந்தைவேலு வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல்ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகளின் படங்களை திறந்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. மல்லிகை பூவிற்கு குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்ய வேண்டும். மல்லிகை பூக்காத காலங்களில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். எள்ளுக்கு அரசே காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சின்ன வெங்காயம் டன்னுக்கு ரூ. 45 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் டன் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம், மாட்டு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50, எறுமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.75 தமிழக அரசு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை ஒன்றிய அரசு மாற்றி அமைக்க வேண்டும். வேளாண் உரிமை மின்சாரத்தை மறைமுகமாக ரத்து செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post நாகப்பட்டினம் / மயிலாடுதுறை 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் புத்தூரில் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: