அரிமளம் அருகே குட்டியாண்டவர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வம்பரம்பட்டி குட்டி ஆண்டவர் கோயில் புரவி எடுப்பு திருவிழா ஆண்டு தோறும் அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடைய நடப்பாண்டு புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மூன்று வாரத்திற்கு முன்னர் சுடுமண் குதிரை செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து குதிரை தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு குதிரை எடுப்பு நிகழ்ச்சிக்கு தயாரான நிலையில் நேற்று புரவி எடுப்பு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுடுமண் குதிரையை அப்பகுதியில் உள்ள நொண்டி கருப்பர் கோயிலில் இருந்து சுமந்து ஊர்வலமாக வந்தனர். குதிரை வந்த வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் சுடுமண் குதிரையை குட்டி ஆண்டவர் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டு குட்டி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதனிடைய நேற்று முதல் திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்ற நிலையில் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு மண்டக படிதாரர்களின் மண்டகப்படி முன்னிட்டு குட்டி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு இன்று காலை (1ம் தேதி) 6.30 மணி அளவில் ஊரார்கள் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அரிமளம் அருகே குட்டியாண்டவர் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: