இறையன்பு, சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமை செயலாளர்- சிவ்தாஸ் மீனா, டிஜிபி-சங்கர் ஜிவால்: சந்தீப் ராய் ரத்தோர் சென்னை போலீஸ் கமிஷனர் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா, டிஜிபியாக சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தமிழக தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2 ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமை செயலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதமாக நிலவி வந்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று பிறப்பித்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராகியுள்ளார் சிவ்தாஸ் மீனா. சென்னை தலைமை செயலகத்தில் அவர் முறைப்படி இன்று பதவியேற்க உள்ளார்.

புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார். 1989ம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டராக பயிற்சியை அவர் தொடங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார். ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு மத்திய வாரியத்தின் சேர்மனாகவும் சிவ்தாஸ் மீனா பதவி வகித்துள்ளார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ்நாடு கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர் ஆவார். நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயர் பெற்றவர். இறுதியாக சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். புதிய தலைமை செயலாளராகியுள்ள சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலம் வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளார். இவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் தமிழ்நாடு காவல்துறைக்கு 31வது டிஜிபியை தேர்வு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா மற்றும் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கடந்த 22ம் தேதி டெல்லி சென்று ேதர்வுக் கமிட்டி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வுக் கமிட்டி முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி யார் என்பது குறித்து டெல்லியில் உள்ள தேர்வு கமிட்டி பணி மூப்பு மற்றும் சிறப்பாக பணியாற்றிய 3 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. அந்த புதிய பட்டியலின் படி தமிழ்நாடு அரசு சுதந்திரமாகவும், மிகவும் கவனமாக பரிசீலனை செய்து, தமிழ்நாடு காவல்துறைக்கு புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவாலை ஜூலை 1ம் தேதி முதல் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறையில் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதால், அவர் வகித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவிக்கு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியாற்றி வரும் சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post இறையன்பு, சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமை செயலாளர்- சிவ்தாஸ் மீனா, டிஜிபி-சங்கர் ஜிவால்: சந்தீப் ராய் ரத்தோர் சென்னை போலீஸ் கமிஷனர் தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: