பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நடக்கும் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு

சென்னை: தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம், இணைந்து முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரிய தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்றார். தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் மாதவன், கிரீன் நீடா இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.முகமது ரபீக், நிதி ஒருங்கிணைப்பாளர் ஆர்.நசீர் அகமது முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் பதியமிட முடிவு செய்யப்பட்டது. ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரிய தலைவர் ஏ.நாராயணன் பேசுகையில், ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒரு இலட்சம் பேர்கள் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் மாதம் பனை விதைகள் சேகரிக்கும் பணி தொடங்குகிறது. பனை விதைகள் சேகரிப்பில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள், பெண்கள் என நான்கு இலட்சம் பேர்கள் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்தில் வாரிய நிர்வாக அலுவலர் சுடலை ராஜ், லயன்ஸ் கிளப் மணிவண்ணன், அத்திக்குழு வானவன், புதுக்கோட்டை கலைபிரபு, இராமநாதபுரம் மரங்களானவன், விழுப்புரம் பனையேறி பாண்டியன், பருத்தி சேரி ராஜா, வழக்கறிஞர் கண்ணன், வாரிய தலைவரின் நேர்முக உதவியாளர் டேவிட் ஜெபராஜ், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிரீன் நீடா சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நடக்கும் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: