ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா நிறைவு

ஆறுமுகநேரி, ஜூன் 27: ஆறுமுகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சப்பர பவனி நடந்தது. தினமும் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 9வது நாள் காலையில் சுவாமி பிச்சாடன கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை டிசிடபிள்யு நிறுவனத்தினர் செய்திருந்தனர். நிறைவு நாளான நேற்று முன்தினம் காலையில் சுவாமி -அம்பாள் பூஞ்சப்பர பவனியும், தீர்த்தவாரி அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவில் சிறப்பு தீபாராதனை, 5 சப்பரங்களின் பவனி நடந்தது. இதில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், ரிஷப வாகனத்தில் அம்பாள் சகித சோமாஸ் கந்தமூர்த்தியும் மற்றொரு ரிஷப வாகனத்தில் பிரியாவிடை அம்பாளும், சப்பரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். மேளதாளம் மற்றும் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க 5 சப்பரங்களின் பவனி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. சப்பரம் சுமந்த சீர்பாத குழுவினர் 30 பேரை தொழிலதிபர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். பின்னர் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிறைவாக சண்டிகேஸ்வரர் பூஜை, பைரவர் பூஜை நடைபெற்றது. பூஜை வைபவங்களை கோயில் பூஜகர் ஐயப்ப பட்டர் நடத்தினார். நிகழ்ச்சிகளில் அரிகிருஷ்ணன், தெரிசை ஐயப்பன், தொழிலதிபர்கள் பூபால் ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கமணி, அமிர்தராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவசங்கரி மற்றும் சிவன் பாய்ஸ் குழுவினர் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் மணியம் சுப்பையா பிள்ளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: