சின்னாளபட்டி அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; எதிர்பார்த்த மீன்கள் சிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்: குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை

சின்னாளப்பட்டி: சின்னாளபட்டி அருகே குரும்பன் குளத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று காலை நடந்தது. இதில், குட்டி, குட்டி மீன்கள் மட்டுமே சிக்கியதால், பொதுமக்கள் வருத்தம் அடைந்தனர். குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள முன்னிலைக்கோட்டை ஊராட்சி, ஆரியநல்லூரில் உள்ள குரும்பன் குளத்தில் மீன்பிடித் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். முன்னதாக கிராம மக்கள் குளத்தின் கரையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் தாரை தப்பட்டைகளுடன் ஊர் முக்கியஸ்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதன்பிறகு குளத்தில் இறங்கி மீன்பிடிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். சுருக்குமடி வலைகளை போட்டு இளைஞர்கள் மீன்களை பிடித்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என உற்சாகமாக குளத்திற்குள் இறங்கி மீன்களைப் போட்டிபோட்டு பிடித்தனர். வலைகளை போட்டு மீன் பிடித்தவர்களுக்கு குட்டி குட்டி மீன்களாக 5 கிலோ வரை கிடைத்தது. பெரிய அளவிலான மீன்கள் ஏதும் கிடைக்காததால் வலைகளை கொண்டு மீன்களை பிடித்தவர்கள் கரையில் மீன்களை கொட்டிச் சென்றனர். அதனை பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கூடைகளில் அள்ளி சென்றனர். இதுகுறித்து மீன்பிடிக்க வந்தவர்கள் கூறுகையில், கடந்தாண்டு இந்த குளத்தில் பெரிய பெரிய மீன்கள் கிடைத்தன.

தற்போது இரவு நேரங்களில் குளத்தில் தூண்டில் போட்டும், வலைகள் போட்டும் மீன்கள் பிடிக்கப்பட்டதால், இந்த மீன்பிடி திருவிழாவில் பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கவில்லை’ என்றனர். மேலும் அடுத்தாண்டு இந்த குளத்தை முறையாக பராமரித்து, ஏலம் விட்டு மீன்பிடி திருவிழா நடத்த உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தனர்.

The post சின்னாளபட்டி அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; எதிர்பார்த்த மீன்கள் சிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்: குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: