மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை பாளை. மத்திய சிறையில் இறந்த கைதி உடலை வாங்க மறுத்து போராட்டம்

நெல்லை, ஜூன் 16: பாளை. மத்திய சிறையில் இறந்த கைதியின் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அரசு வேலை, இழப்பீடு தொகை வழங்க வேண்டி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி (26). இவர் மது விற்ற வழக்கில் புளியங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த 12ம் தேதி முதல் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறையில் நேற்று முன்தினம் அவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதையறிந்த உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி புளியங்குடி பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டு, கலைந்து சென்றனர்.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கசாமியின் உடல் முழுவதும் ஸ்கேனிங் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை முதலாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தங்கசாமிக்கு உரிய சிகிச்சையை விரைந்து வழங்காமல் காலதாமதப்படுத்திய பாளை. சிறைத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும்.

குடும்பத்திலுள்ளவர்களுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக தங்கசாமியின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து புளியங்குடியில் சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.அவர்களிடம் போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ேகாரிக்கைகள் கலெக்டர் மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடலை வாங்க மறுத்து விட்டதால் 2வது நாளாக அவரது உடல் பிரரே பரிசோதனை முடிந்து பாளை. அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

The post மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை பாளை. மத்திய சிறையில் இறந்த கைதி உடலை வாங்க மறுத்து போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: