நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மண் குவியலால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மண் குவியலால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மகாபலிபுரம் சாலையில் முடிவடையும் 18 கிமீ கொண்ட வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையோரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், இந்த சாலையில் உள்ள நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடர்ந்து காணப்படும் மண் குவியலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதனால், இந்த பகுதி உயிர்பலி வாங்கும் பகுதியாக உள்ளது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது குறித்து தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே ஊனைமாஞ்சேரி மற்றும் நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளின் எல்லை பகுதியில் ஏராளமான கிரஷர்கள் உள்ளன.

இங்கு வாலாஜாபாத் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்களில் சக்கை கற்கள் ஏற்றி வரப்படுகிறது. பின்னர், இப்பகுதியில் உள்ள கிரஷர்களில் கொட்டி அரைத்து அதனை ஜல்லி கற்கள், சிப்ஸ், எம்சாண்ட் மற்றும் டஸ்ட்டுகளாக்கி செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு ஏற்றிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால், நல்லம்பாக்கம் சாலை முழுவதும் குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும், வெயில் காலங்களில் புழுதி நிறைந்த சாலையாகவும் காட்சி அளித்து வருகிறது.

மேலும், நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் வாகனங்கள் திரும்பும்போது மரண பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நெடுஞ்சாலை முழுவதிலும், இதேபோல் சென்டர் மீடியன் ஓரங்களிலும் அடர்ந்த மண் குவியல் காணப்படுகிறது. மேலும், இந்த சாலையில் இயங்கி வரும் அரசு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகளில் செல்லும் பயணிகள் மீது மண் மற்றும் புழுதி வாரி அடிப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். அப்போது, சாலையில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்று இப்பகுதியில் அடிக்கடி தொடர்ந்து விபத்து நடந்து வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, இது குறித்து தமிழக முதல்வர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மண் குவியலால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: