ஐடிஐகளில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை அவகாசம்

 

நாமக்கல் ஜூன் 11: நாமக்கல், கொல்லிமலை ஐடிஐகளில் 20ம் தேதி வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசினர் ஐடிஐ அகில இந்திய அளவில் 12வது இடத்திலும், தமிழ்நாட்டில் 5வது இடமும் பெற்றுள்ளது. இங்கு 2 ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட், ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – புரோகிராமிங் அசிஸ்டென்ட், 2 ஆண்டு பயிற்சி தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெறுகிறது. மேலும் 2023 ஆண்டில் புதிதாக துவங்கப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட டாடா டெக்னாலஜி (4.0) தொழிற்பிரிவுகளான உற்பத்தி செயல்முறை கட்டுபாடு மற்றும் ஆட்டோமேசன் – ஓராண்டு, தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் – ஓராண்டு பயிற்சிகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.

பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது, வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, முடிவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும், பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மாதம் ₹750 உதவித்தொகையுடன் இலவச லேப்டாப், சைக்கிள், பாடபுத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் தோறும் ₹1000 உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையம் மூலமாகவும், நாமக்கல் மற்றும் கொல்லிமலை ஐடிஐ அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டும், வரும் 20ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஐடிஐகளில் சேர்க்கைக்கு 20ம் தேதி வரை அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: