ஆஸ்திரேலியா 270/8 டிக்ளேர்; இந்தியாவுக்கு 444 ரன் இலக்கு

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்திய அணிக்கு 444 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச… ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன் குவித்தது. ஹெட் 163 ரன், ஸ்மித் 121, கேரி 48, வார்னர் 43 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, ஷமி, ஷர்துல் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரகானே 89, ஷர்துல் 51, ஜடேஜா 48 ரன் விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், போலண்ட், கிரீன் தலா 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 173 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்திருந்தது. லபுஷேன் 41, கிரீன் 7 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். லபுஷேன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் வேகத்தில் புஜாரா வசம் பிடிபட்டார். அடுத்து கிரீன் – அலெக்ஸ் கேரி இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மிக நிதானமாக விளையாடிய கிரீன் 25 ரன் எடுத்து (95 பந்து, 4 பவுண்டரி) ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். இதனால் உற்சாகமாக இந்திய வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

எனினும், கேரி – ஸ்டார்க் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்து ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை பெறுவதை உறுதி செய்தது. ஸ்டார்க் 41 ரன் (57 பந்து, 7 பவுண்டரி), கம்மின்ஸ் 5 ரன் எடுத்து ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா 84.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, உமேஷ், ஷமி தலா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 444 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித், கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 41 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். கில் 18 ரன் எடுத்து போலண்ட் வேகத்தில் கிரீன் வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் புஜாரா இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. இந்தியா ஓவருக்கு சராசரியாக 5 ரன் எடுத்ததால், ஆஸி. தரப்பு சற்று பதற்றம் அடைந்தது.இந்த நிலையில், ரோகித் 43 ரன் (60 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), புஜாரா 27 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது. இந்தியா 20.4 ஓவரில் 93 ரன்னுக்கு விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்த நிலையில், கோஹ்லி – ரகானே இணைந்து போராடினர்.

The post ஆஸ்திரேலியா 270/8 டிக்ளேர்; இந்தியாவுக்கு 444 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: