ரேஷன் கடைகளில் ஆட்சேர்ப்பு பணிக்கு கால நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் (சென்னை தவிர்த்து) 5000க்கும் மேற்பட்ட காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் இடங்களை நிரப்ப 2022 அக்டோபர் 13ல் அறிவிப்புகள் வெளியாகின. இதற்காக, இணையதளம் வாயிலாக லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம் என்பது அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்து 6 மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, வழக்கின் சாராம்சத்தை பொறுத்தவரை, இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தனர். இதுகுறித்து அரசு தரப்பிலும் உரிய விளக்கம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனும், ரேஷன் கடை ஊழியர்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நியாயவிலை கடைகளில் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு செயலர் ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நியாயவிலை கடைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்தவகையில் விளம்பரங்கள் செய்யப்பட்ட நாள் முதல் கணக்கில் கொண்டு ஏப்ரல் 10ம் தேதி ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது, இந்த பணிகளை செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

The post ரேஷன் கடைகளில் ஆட்சேர்ப்பு பணிக்கு கால நீட்டிப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: