9 ஆண்டில் செய்த சாதனைகளை பட்டியலிட அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா? மக்களின் திமுக ஆதரவு வெள்ளத்தில் அதிமுக, பாஜ அடித்துச்செல்லப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சேலம்: தமிழக மக்களின் திமுக ஆதரவு வெள்ளத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, அடித்துச்செல்லப்படும் என்று சேலத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசினார்.
சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை 5 ரோடு ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் நேரு வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் நமக்காக காத்திருக்கிறது. அடுத்த மே மாதம் தானே வருகிறது என மெத்தனமாக, அலட்சியமாக இருந்து விடக்கூடாது. பாஜவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருகிறது. அதனால் அவர்கள் எந்த முடிவை எப்படி எடுப்பார்கள் எனத்தெரியாது. கர்நாடக மாநில தேர்தலைப்போல், அடுத்து வரும் மாநில தேர்தல்களில் தோல்வி வந்தால், முன்கூட்டியே கூட ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவார்கள்.

அதனால் இப்போதே நாம் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ நிர்வாகிகளுடனும், பொதுக்கூட்டத்திலும் பேசவுள்ளார். தமிழ்நாடு வரும் அமைச்சர் அமித்ஷா, கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்துள்ளோம் என்ற பட்டியலை வெளியிட கேட்டுக்கொள்கிறேன். 9 ஆண்டு என்ன செய்தோம் என்பதை கூற தயாரா?. கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது. அந்த கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை எடுத்து வந்து செயல்படுத்தியிருக்கிறோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டம், திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ரூ.600 கோடியில் கொண்டு வரப்பட்டது. தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. எங்கள் கூட்டணி ஆட்சியில் இந்திய அரசு செயல்படுத்திய திட்டங்களில் 11 சதவீத திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மிக முக்கியமான 69 திட்டங்களை கொண்டு வந்தோம்.

பழமையான தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தோம். நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.56,664.21 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ரூ.120 கோடியில் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.1,650 கோடியில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, ரூ.2,427 கோடியில் சேதுசமுத்திர திட்ட பணி துவக்கம், நெசவாளர்களுக்கு வாட் வரி நீக்கம், ரூ.928 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர்கேஜ் பாதைகள் அனைத்தும் அகல ரயில்பாதையாக மாற்றம், ரூ.1,828 கோடியில் 90 ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், திருச்சி, மதுரை, கோவை விமானநிலைய மேம்பாடு, சென்னை கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை மத்தியில் கிண்டி, கத்திபாராவில் மேம்பாலம், நீர்வழிப்பாதை, பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், கரூர், ஈரோடு, சேலத்தில் ரூ.400 கோடியில் ஜவுளிபூங்கா என எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். இதேபோல் ஒரு பட்டியலை அமைச்சர் அமித்ஷா, 9 ஆண்டு ஆட்சியில் செய்திருந்தால் அவற்றை கூற வேண்டும். அதற்கு அவருக்கு ஆற்றல், தைரியம் இருக்கிறதா? அவர் நிச்சயம் சொல்ல வேண்டும் என கேட்கிறேன். இதுவே எனது கேள்வி. பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 2015ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இன்னும் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டுக்கான எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியை ஒதுக்க மனமில்லாமல் ஒரு ஆட்சி நடக்கிறது. இதற்கும் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும் என முதல்வராக எதிர்பார்க்கிறேன்.

பாஜ தமிழ்நாட்டிற்கு செய்ததெல்லாம், இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு, நீட் நுழைவுத்தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவைதான். காசி தமிழ் சங்கமம், பாரதி பாடல், திருக்குறல் பாடல் போன்றவற்றை பேசி வாக்குகளை வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கு கொத்தடிமை அதிமுக துணையிருக்கிறது என நம்பிக்கையோடு வருகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. சசிகலா காலை நோக்கி ஊர்ந்து சென்று வணங்கிவிட்டு ஆட்சிக்கு வந்ததோடு, பாஜவுக்கு பல்லக்கு தூக்கி 4 ஆண்டு நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். தற்போது அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பை பாஜ கொடுக்க இருப்பதாக தகவல் வருகிறது. இதுவும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களுக்கு அதிமுகவை துணைக்கு இழுத்து பொறுப்பை சுமக்க வைக்கும் தந்திரமாக கூட இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் திமுக ஆதரவு வெள்ளத்தில் பாஜ-அதிமுக அடித்துச் செல்லப்படுவார்கள். வடக்கு வரை திராவிட மாடல் ஒலிக்கிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏவல்துறைகளை அனுப்பி விடுவார்கள். அதற்கு நானும், திமுகவும் அஞ்சப் போவதில்லை. வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே. இவ்வாறு பேசினார்.

The post 9 ஆண்டில் செய்த சாதனைகளை பட்டியலிட அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா? மக்களின் திமுக ஆதரவு வெள்ளத்தில் அதிமுக, பாஜ அடித்துச்செல்லப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: