பேருந்தை வழிமறித்த 5 காட்டு யானைகள்: பயணிகள் பீதி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிங்காட்டில் அரசு பேருந்தை 5 யானைகள் மறித்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல 3-வது பாதையாக வெள்ளியங்காடு- மஞ்சூர் சாலை உள்ளது. இச்சாலை வழியாக மஞ்சூருக்கு அரசுப்பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இப்பாதை வழியாக நேற்று மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வெள்ளியங்காடு அருகே வந்தபோது 5 காட்டு யானைகள் அரசுப்பேருந்தை திடீரென வழிமறித்தன. யானைகள் கூட்டத்தை பார்த்ததும் டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பின்னோக்கி இயக்கி சிறிது தூரம் சென்று நிறுத்தினார்.

ஆனால், யானைகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதனால் பேருந்தில் இருந்த டிரைவரும், பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர். இதேபோல் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் வாகனத்தை அங்கேயே நிறுத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பேருந்தின் டிரைவரும், பயணிகளும் நிம்மதியடைந்தனர். பின்னர் பேருந்து உள்ளிட்ட பிற வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

The post பேருந்தை வழிமறித்த 5 காட்டு யானைகள்: பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: