வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு: பிளம்ஸ், பிச்சிஸ் விளைச்சல் 10 சதவீதமாக குறைந்தது.! கொடைக்கானல் பகுதி விவசாயிகள் வேதனை

கொடைக்கானல்: கொடைக்கானலை சுற்றியுள்ள பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, சின்ன பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. இங்கு விளையும் மலை காய்கறிகள் மட்டுமின்றி மலை பழங்களும் பிரசித்தி பெற்றதுதான். இப்பகுதிகளில் பிளம்ஸ், பிச்சிஸ், பேரிக்காய், அவக்கோடா உள்ளிட்ட மலை பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் அதிகளவில் பிளம்ஸ், பிச்சிஸ் அறுவடை செய்யப்படுவது வழக்கம்.

இதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து மே, ஜூன் மாதங்களில் பிளம்ஸ், பிச்சிஸ் அறுவடை செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும். இந்த 2 மாதங்களில் மட்டும் பல நூறு டன்களில் விளைவிக்கப்படும் பிளம்ஸ், பிச்சிஸ் சந்தைப்படுத்தப்பட்டு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும். ஆனால் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மலை பழங்களின் விளைச்சல் 100 சதவீதத்தில் இருந்து வெறும் 10 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எல்லா ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் பிளம்ஸ், பிச்சிஸ் பழங்களில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வர்த்தகம் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு பிளம்ஸ், பிச்சிஸ் பழ விளைச்சல் குறைந்ததால் ரூ.10 கோடி வருவாய் வருவதற்கு கூட வாய்ப்பில்லை. மே, ஜூன் மாதங்களில் பிளம்ஸ், பிச்சிஸ் மரங்கள் முழுக்க பழங்கள் இருக்கக்கூடிய நிலையில் தற்போது 90 சதவீத மரங்களில் வெறும் இலைகள் மட்டுமே காணப்படுகிறது. வரலாறு காணாத வகையில் மலை பழங்களின் விளைச்சல் குறைந்ததற்கு பருவநிலை மாற்றமா, நோய் தாக்குதலா என்பது குறித்து ஆராய வேண்டும்’ என்றனர். பிளம்ஸ், பிச்சிஸ் பழங்களின் வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து மொத்த வியாபாரத்தில் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், சில்லரை வியாபாரத்தில் ரூ.200 வரையிலும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு: பிளம்ஸ், பிச்சிஸ் விளைச்சல் 10 சதவீதமாக குறைந்தது.! கொடைக்கானல் பகுதி விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: