பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

தர்மபுரி, ஜூன் 10: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில், 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற விளம்பர பலகையை வைக்க வேண்டும். கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பலகை வைப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. 1064 கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, அதில் 222 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புகையிலை தடுப்பு திட்டம் சிறப்பாக செயல்பட, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட மருத்துவக் குழுவினரால் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது, அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி, கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: