எஸ்.டி., மாணவியரின் நர்சிங் படிப்பு செலவை அரசே ஏற்கும் கலெக்டர் தகவல்

நாமக்கல், ஜூன் 10: பழங்குடியினர் இன மாணவிகள் நர்சிங் டிப்ளேமா படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில், 2023-2024ம் ஆண்டில் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள பழங்குடியின மாணவிகளின் மேற்படிப்பிற்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட, நர்சிங் பயிற்சி மையங்களில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, தொடர்ந்து 3ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தக கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள், ஒரு மாணவியருக்கு ₹70,000 ஆகும். இந்த கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும். எனவே, 2023-2024ம் ஆண்டில் பிளஸ்2 வகுப்பு பொதுத் தேர்வில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சம்மந்தமான விபரங்களுக்கு 94438 36370 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எஸ்.டி., மாணவியரின் நர்சிங் படிப்பு செலவை அரசே ஏற்கும் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: