ரகானே 89, ஷர்துல் 51 ரன் விளாசல் முதல் இன்னிங்சில் இந்தியா 296ல் ஆல் அவுட்: ஆஸி. முன்னிலை

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச… ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன் குவித்தது. வார்னர் 43, ஸ்மித் 121, ஹெட் 163, கேரி 48 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, ஷமி, ஷர்துல் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா, 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது. ரகானே 29 ரன், பரத் 5 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பரத் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் போலண்ட் வேகத்தில் கிளீன் போல்டானார்.

இதையடுத்து ரகானேவுடன் ஷர்துல் தாகூர் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ரகானே 92 பந்தில் அரை சதம் அடித்தார். ரகானே – ஷர்துல் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது. ரகானே 89 ரன் (129 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் கிரீன் வசம் பிடிபட்டார். உமேஷ் 5 ரன் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ஷர்துல் 51 ரன் (109 பந்து, 6 பவுண்டரி) எடுத்து கிரீன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷமி 13 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன் குவித்து ஆல் அவுட்டானது (69.4 ஓவர்). சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், போலண்ட், கிரீன் தலா 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 173 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார். உஸ்மான் 13 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் பரத் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, ஆஸி. 24 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், லபுஷேன் – ஸ்மித் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். ஸ்மித் 34 ரன் (47 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஜடேஜா சுழலில் தாகூர் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தது.

* ரகானே 5000
இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே, டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன் என்ற சாதனை மைல் கல்லை நேற்று எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 89 ரன் விளாசிய ரகானே இதுவரை 5,020 ரன் (83 டெஸ்ட், அதிகம் 188, சராசரி 38.52, சதம் 12, அரை சதம் 25) எடுத்துள்ளார்.

The post ரகானே 89, ஷர்துல் 51 ரன் விளாசல் முதல் இன்னிங்சில் இந்தியா 296ல் ஆல் அவுட்: ஆஸி. முன்னிலை appeared first on Dinakaran.

Related Stories: