வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி, ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): வணிக நிறுவனங்களுக்கு இரண்டாம் முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் வாரியம் என்பது லாப நஷ்டம் பார்த்து இயங்கக்கூடிய வணிக நிறுவனம் அல்ல. இது ஒரு சேவை துறை. குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் விலையில்லாமலும், மானிய விலையிலும் மின்சாரத்தை வழங்க வேண்டும். அதேபோல், வணிக நிறுவனங்களுக்கும், தொழில் பாதிக்காத அளவுக்கு மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஒன்றிய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, அதிமுக ஆட்சி காலங்களில் செய்தது போல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): ஒன்பது மாதங்களுக்கு முன் வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றிற்கான மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

The post வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி, ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: