மணிமுத்தாறு அணை பகுதியில் சாகச சூழல் சுற்றுலா பூங்கா திட்டம்

அம்பை, ஜூன் 10: மணிமுத்தாறு அணை பகுதியில் சாகச சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை கட்டப்பட்ட போதே அணைக்கு வருவோரை கவருவதற்காக அதன் அடிவாரத்தில் பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டது. நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா சிதிலமடைந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இப்பூங்காவை சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மணிமுத்தாறு பூங்கா சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக் கோரிக்கையின் மூலம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிதிலமடைந்து காணப்படும் மணிமுத்தாறு பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் மேல் பகுதிக்கு சென்று பூங்காவின் மேற்பரப்பு முழுவதையும் பார்வையிட்ட அவர், அணையின் அடிவார மேற்கு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் சாகச சூழல் சுற்றுலா பூங்காவும், 1 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்தவும் இடத்தை தேர்வு செய்து, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மணிமுத்தாறு அணையில் படகு போக்குவரத்து தொடங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், மணிமுத்தாறு பூங்கா ரூ.5 கோடி மதிப்பில் மக்கள் இயற்கையை ரசித்தபடி அமருவதற்கான வசதி, சிறுவர்- சிறுமியருக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பூங்கா அமைத்து சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும், என்றார். மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவிகளுக்கு அரசு பேருந்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் தடுத்து இறக்கி விடுவது, ஆட்டோ, பைக் வாகனங்களை அனுமதிப்பது குறித்து கேட்டபோது, தற்போது தான் நீர்வளத்துறை தங்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், சுற்றுலாத்துறை மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மாவட்ட அலுவலர் சீதாராமன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேரூர் செயலாளர் முத்துகணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி பாலசந்தர், இளைஞரணி பிரபு, மாவட்ட பிரதிநிதி பீர்முகம்மது, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் தாஸ், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவிப்பொறியாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மணிமுத்தாறு அணை பகுதியில் சாகச சூழல் சுற்றுலா பூங்கா திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: