தனக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவற்றை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

மேலும், வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் அவது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

The post தனக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: