நட்சத்திரப் பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது நட்சத்திரப்பழம். இது தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.இந்தப் பழத்தின் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது, இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

நட்சத்திரப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளையும் மலக்கட்டுகளையும் வெளியேற்றும். அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது, இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திர பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

நட்சத்திரப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.நட்சத்திரப் பழம் குறைந்த அளவிலான கலோரியைக் கொண்டது. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்ததாகும். ஒரு நடுத்தர அளவிலான நட்சத்திரப் பழத்தில் 28 கலோரிகள் மட்டுமே உள்ளன.

நட்சத்திர பழத்தில் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டது. எனவே, நட்சத்திரப் பழத்தை கிடைக்கும் காலங்களில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.நட்சத்திரப் பழம் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும், நடுத்தர அளவிலான பழத்தில் 3 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது.

ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் நார்ச்சத்து முக்கியமானது.ஆனால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நட்சத்திரப் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் அதில் அதிக அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது, இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். எனவே, அவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.

தொகுப்பு : தவநிதி

The post நட்சத்திரப் பழத்தின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Related Stories: