வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 9: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 55 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் வயது உச்சவரம்பு 45 லிருந்து 55 வயதாக உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச கல்வித் தகுதியிலிருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படும். கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமானியம் ரூ.3.75 லட்சம் மானியமாக பெற்று பயன் பெறலாம். நேரடி விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு எண்.426, மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் 610004 (தொலைபேசி எண்: 04366-224402) என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: