அறந்தாங்கியில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது

புதுக்கோட்டை,ஜூன்9: அறந்தாங்கியில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. எனவே பயனாளிகள் அதற்காக பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருச்சிராப்பள்ளி கோட்டம், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சியில் நரிமேடு, பாலன் நகர் பகுதி-1, போஸ்நகர் ஆகிய திட்டப்பகுதிகள், இலுப்பூர் பேரூராட்சியில் எண்ணை மற்றும் இடையப்பட்டி திட்டப்பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் பாலன் நகர் பகுதி-2, சந்தைபேட்டை, ரெங்கம்மாள்சத்திரம் ஆகிய திட்டப்பகுதிகள், அறந்தாங்கி நகராட்சியில் அறந்தாங்கி திட்டப்பகுதி, கறம்பக்குடி, ஆலங்குடி, அரிமளம், அன்னவாசல் பகுதி-1 மற்றும் பகுதி-2, பொன்னமராவதி, கீரனூர் ஆகிய பேரூராட்சிகளில் திட்டப்பகுதிகள் கட்டப்பட்டு வருகின்றது. இதில் அறந்தாங்கி நகராட்சியில், 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட திட்டப்பகுதி கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இத்திட்டப்பகுதியில் ஒரு குடியிருப்புக்கு ஒன்றிய அரசின் மூலம் ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மூலம் ரூ.7லட்சம், மற்றும் பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.1லட்சம், என தோராயமாக வசூலிக்கப்பட்டது.

அதன்படி பயனாளிகளும் பங்களிப்பு தொகை தோராயமாக ரூ.1லட்சம்,செலுத்தி உள்ளனர். மேலும் பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.2.40லட்சம், என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே ரூ.1லட்சம், செலுத்திய பயனாளிகள் தற்போது மீதமுள்ள பங்களிப்பு தொகை ரூ1.40லட்சம், செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறந்தாங்கி திட்டப்பகுதி போலவே பயனாளியின் பங்களிப்பு தொகை போஸ்நகர் ரூ.1.5லட்சம், பாலன் நகர் பகுதி-2 ரூ.1.50லட்சம், சந்தைபேட்டை ரூ.1.50லட்சம், கீரனூர் 1.50லட்சம், ஆலங்குடி ரூ.1.75லட்சம், பொன்னமராவதி 2.05லட்சம், கறம்பக்குடி ரூ.2.44லட்சம்,, அன்னவாசல் பகுதி-1 ரூ.2.50லட்சம், அன்னவாசல் பகுதி-2 ரூ.2.50லட்சம், அரிமளம் ரூ.2.51லட்சம், மற்றும் ரெங்கம்மாள்சத்திரம் ரூ.3.13லட்சம், என வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே அறந்தாங்கி திட்டப்பகுதியிலுள்ள பயனாளிகள் வாரியம் நிர்ணயம் செய்த ரூ.2.40லட்சத்தில் கட்டிய முன்பணம் ரூ.1லட்சம், போக மீதமுள்ள ரூ.1.40லட்சம், தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் எனவும், முழு தொகையை செலுத்த இயலாத பயனாளிகளுக்கு அறந்தாங்கி திட்டப்பகுதி மற்றும் அந்தத்த திட்டப்பகுதியில் மாவட்ட முதன்மை வங்கியின் மூலம் வங்கி கடன் முகாம் நடத்தி வங்கி கடன் பெற ஆவண செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post அறந்தாங்கியில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: