தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ₹23.75 கோடியில் அதி தீவிர சிகிச்சை மையம் 6 மாடி கட்டிடம் கட்டப்படுகிறது.

தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ₹23.75 கோடி மதிப்பில் அதிதீவிர சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக 6 மாடி கொண்ட கட்டிடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 500 படுக்கை வசதிகளுடன் 5 மாடி மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. இதில் 16 அறுவை சிகிச்சை அரங்குகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, கண், பல், எலும்பு, பிரசவம், பச்சிளங் குழந்தைகள், போதை மறுவாழ்வு மையம், கண் வங்கி, தாய்பால் வங்கி என தனியாக இயங்கி வருகிறது.

மேலும் தலசிமியா, டயாலிசிஸ், ஆதரவற்ற மனநோயாளிகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையம், ரத்தத்தில் உள்ள அணுக்களை கண்டறியும் ஹீமோபிலியா உள்ளிட்ட 28 துறை சார்ந்த சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. தர்மபுரி, கிருஷணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 950க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தற்போது அரசு மருத்துவமனை 1200 படுக்கை வசதி கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு தினசரி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 280 டாக்டர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. விபத்து, விஷம் குடித்து வருதல், தீக்காயம் உள்ளிட்டவைகளுக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிதீவிர சிகிச்சை பிரிவை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று, அரசு மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு(கிரிட்டிக்கல் கேர் பிளாக்), லாண்டரி(துணி துவைக்கும் மையம்) ஆகியவை அமைக்கக ₹23.75 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை மையம்(கிரிட்டிக்கல் கேர் பிளாக்), லாண்டரி(துணி துவைக்கும் மையம்) ஆகியவை ₹23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. முதல்கட்டமாக பிரேத பரிசோதனை கூடம் அருகே உள்ள காலியிடத்தில் தேசிய தரச்சான்று கிடைக்கும் வகையில் நவீன வசதியுடன் கூடிய லாண்டரி(துணி துவைக்கும் மையம்) மையக் கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டிடம் கட்டி முடித்த பிறகு, தற்போது ஆக்சிஜன் சேமிப்பு பிளாண்ட் அருகே இயங்கும் லாண்டரி மையத்தை காலி செய்து விட்டு, அதிதீவிர சிகிச்சை மையம் 6 மாடியில் அமைக்கப்படும். இந்த 6 மாடி கட்டிடம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கி விடும். தற்போது லாண்டரிக்கான கட்டுமானப்பணிகள் விறு விறுப்பாக நடந்துவருகிறது.

The post தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ₹23.75 கோடியில் அதி தீவிர சிகிச்சை மையம் 6 மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. appeared first on Dinakaran.

Related Stories: