ஹைடனுடன் ஒரு கருப்பட்டி காபி

உலக அளவில் இந்திய உணவுகளுக்கென்று ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் உலக நாடுகள் அனைத்திலும் இந்திய உணவகங்கள் கோலோச்சுகின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய உணவுகளை நம்மூர்க்காரர்கள் தேடிப்பிடித்து வெளுப்பதைப்போல, அந்த நாட்டு பிரஜைகளும் சாப்பிட்டுப் பார்த்து சப்புக்கொட்டுவதுண்டு.

அதேபோல வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பாரீனர்ஸ் இங்கு கிடைக்கும் பல ஸ்பெஷல் உணவுகளை ஒரு பதம் பார்த்து செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் இட்லி, தோசைக்கெல்லாம் எப்பவுமே மவுசு ஜாஸ்தி. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வரும் விளையாட்டு வீரர்கள், நம்மூரின் பாரம்பரிய உணவுகளை டேஸ்ட் பார்த்துவிட்டு செல்வார்கள். தற்போது ஐபிஎல் சீசன்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இங்கு குவிந்திருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக தமிழகம் வந்திருந்த சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன், சில நேரங்களில் தனது மகள் கிரேஸி ஹைடனுடன் சென்னையில் ஜாலி ரெய்டில் ஈடுபடுகிறார். அதேபோல கடந்த வாரம் சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள ஆலடிப்பட்டியான் அல்வா கடை மற்றும் கருப்பட்டி காபி கடையில் சற்று நேரம் இளைப்பாற தனது காரை ஓரம் கட்டி இருக்கிறார். இந்தக் கடையில் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டியில் காபி தயார் செய்வதை அறிந்த அவர் ஒரு கப் காபியை வாங்கி சுவைத்துள்ளார். மேலும் அங்கு தயார் செய்யப்படும் பணியாரத்தையும், அவரும், அவரது மகள் கிரேஸியும் சாப்பிட்டு ரசித்துள்ளனர்.

ஒரு உணவை ருசிக்கும்போது அது தயார் செய்யப்படும் விதம் எப்படி என்பது அனைவருக்குள்ளும் தோன்றும். சாப்பிட்டு பிரியரான ஹைடனுக்கு தோன்றாதா? பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த கடைக்காரரிடம், பணியாரம் சுடுவது எப்படி, கொஞ்சம் சொல்லித்தரீங்களா? என ஆர்வம் பொங்க கேட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து கடைக்காரரும், பணியாரம் சுடுவது பற்றி ஹைடனுடன் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக பணியாரத்திற்காக தயார் செய்யப்படும் அரிசி மாவின் பக்குவம் குறித்து விலாவரியாக விளக்கியுள்ளார். இந்த நிகழ்வை மேத்யூ ஹைடன் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பாரம்பரிய உணவான பணியாரம் மற்றும் கருப்பட்டி காபியின் சுவையைப் பற்றி ஆஹோ? ஒஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆஸ்திரேலியாவை பொருத்தவரையில் சர்க்கரையில் மட்டுமே காபி தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் அருந்திய கருப்பட்டி காபி தங்களை மிகவும் ஈர்த்துள்ளதாக மேத்யூ ஹைடனும், அவரது செல்ல மகள் கிரேஸி ஹைடனும் தெரிவித்துள்ளனர். கருப்பட்டி காபியை ருசித்ததோடு மட்டுமில்லாமல், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து உற்சாகப்படுத்தி இருக்கிறார். ஹைடனைப் பார்த்த சந்தோசத்தில் திக்குமுக்காடி நிற்கிறார்கள் நம்ம கருப்பட்டி கைஸ்.

 

The post ஹைடனுடன் ஒரு கருப்பட்டி காபி appeared first on Dinakaran.

Related Stories: