தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்

திருச்சி: தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்லத்திருமண விழாவில் சசிகலாவை சந்திக்க ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இருவரையும் சசிகலா புறக்கணித்து விட்டார். நடுநிலை வகிப்பதுபோல அவர் காட்டி கொள்ள விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டபோது, ஓபிஎஸ்க்கு பக்க பலமாக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது பன்னீர்செல்வத்திடம் இருக்கும் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் வைத்திலிங்கம் பின்னால் வந்தவர்கள். பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் அவருடைய ஆதரவாளர்கள்தான். இதனால் வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க இபிஎஸ் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக முழுமையாக இபிஎஸ் கட்டுப்பாட்டிற்கு சென்றதால் அதிமுகவை கைப்பற்ற முடியாமல் போன ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. இதற்கேற்ப சமீபத்தில் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் சந்தித்து பேசினர். இதனால் அவர்கள் விரைவில் சசிகலாவையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்றார்போல ஓபிஎஸ், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று கூறினார்.

ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கை தகர்க்கவும், தங்களுக்குத்தான் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம் என்று காட்டவும் அவர்கள் திட்டமிட்டு செயல்படத் தொடங்கினர். ஆனால் இதில் சசிகலா வெளிப்படையாக ஆதரவு அளிக்க மறுத்து வருகிறார். இதற்கு காரணம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோற்கும். அப்போது தொண்டர்கள், நிர்வாகிகள் தன்னை தலைமை ஏற்க அழைப்பார்கள் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காகவே தான் நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொள்கிறார் சசிகலா. அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் தான் பொதுவானவர் போல காட்டி கொள்ள முடிவு செய்துள்ள சசிகலா, நேரடியாக ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை சந்திக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமண விழா தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் இரவே தஞ்சாவூர் வந்தார். நேற்று காலை விழா நடைபெறும் மண்டபத்துக்கு ஓபிஎஸ் காரில் வந்தார். சிறிது நேரத்தில் டிடிவி தினகரனும் வந்தார். காரிலிருந்து இறங்கிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். பின்னர் மண்டபத்துக்குள் இருவரும் ஒன்றாக சென்று அருகருகே இருக்கையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக மேடை ஏறி விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொள்ளுமாறு சசிகலாவுக்கு, வைத்திலிங்கம் நேரில் அழைப்பிதழ் வழங்கியதாக தெரிகிறது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரையும் பொது இடத்தில் சந்திப்பதை சசிகலா தவிர்ப்பதற்காகவே அவர் திருமணத்திற்கு வரவில்லை என்கின்றனர். இதனால் தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் சசிகலாவை தனியாக சந்தித்து பேச ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திப்பதை சசிகலா தவிர்த்துள்ளதால் அக்கட்சி தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

* வரவேற்பில் பங்கேற்ற அன்வர் ராஜா பண்ருட்டி ஆப்சென்ட்
ராமநாதபுரம் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, தான் எந்த அணிக்கும் ஆதரவில்லை எனக்கூறி தனித்து செயல்பட்டு வருகிறார். அவரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், அன்வர் ராஜாவிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதே போல ராமநாதபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி முக்கிய நிர்வாகி ஒருவரும் அன்வர் ராஜாவை அணுகியிருக்கிறார். ஆனால் அன்வர் யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வைத்திலிங்கம் இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் அன்வர் ராஜா கலந்து கொண்டார். இதனால் அன்வர் ராஜா ஓபிஎஸ் அணியில் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திருமண விழாவில் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

* ஆணவம், பேராசையோடு செயல்படுகிறார் எடப்பாடி: டிடிவி தினகரன் கடும் தாக்கு
தஞ்சாவூரில் ஓபிஎஸ் அணி ஆதரவாளரான வைத்திலிங்கம் இளைய மகன் திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எம்ஜிஆர் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாகத்தான் துவக்கினார். இன்றைக்கு அது மாறுபட்டிருக்கிறது. மீண்டும் அந்த சூழல் வருவதற்காக பொதுமக்கள் நாங்கள் செல்லும் இடம் எல்லாம் நீங்கள் ஒருங்கிணைந்து- செயல்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்த தொண்டர்கள் இணைய வேண்டும் என்றார்.

அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக அமமுக, அதிமுகவுடன் (ஓபிஎஸ் அணி) கைகோர்த்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக ஒருவர் சுயநல போக்கில் ஆணவத்தாலும், பேராசையாலும் செயல்பட்டு வருகிறார். பழைய நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பதற்கு வைத்திலிங்கம் இல்ல திருமணம் இன்றைக்கு ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. இது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இது இயற்கையாக நிகழ்ந்த இணைப்பு. இந்த இணைப்பு வரும் காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக நாங்கள் ஒருங்கிணைந்து நட்புடன் செயல்படுவோம் என்றார்.

The post தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: