விதிகளை பின்பற்றாமல் உடற்கூறாய்வு செய்ததாக புகார்: கரூர் மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!

மதுரை: கரூர் சவரிமேடு கிராமத்தை சேர்ந்த மாணவி தேவிகாவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா, இவருக்கு வயது 16. தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது ஒரு வருடமாக வீட்டில் இருந்து விவசாயக் கூலி வேலைக்கு சென்று வந்தார். மே 24ம் தேதி தேவிகாவை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் தெரியாததால் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே சிறுமி தேவிகா (16) காணாமல் போன நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றாமல் உடற்கூறாய்வு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மாணவி தேவிகாவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நாளை நண்பகல் 12 மணியளவில் மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். தடயவியல், உடற்கூராய்வு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடியோ பதிவுடன் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும். மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட பின், சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சிறுமியின் உடலை மறு உடற்கூராய்வு செய்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post விதிகளை பின்பற்றாமல் உடற்கூறாய்வு செய்ததாக புகார்: கரூர் மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..! appeared first on Dinakaran.

Related Stories: