பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுகள்

நன்றி குங்குமம் டாக்டர்

இளங்குழுவிகளுக்கான சீருணவு
(6-12 மாதங்கள்)
உணவுத் தொகுதி அளவு
தானியங்கள் 45 கிராம்
பருப்புவகைகள் 15 கிராம்
பால் 500 மி.லி
வேர்களும், கிழங்குகளும் 50 கிராம்
கீரைகள் 25 கிராம்
காய்கறிகள் 25 கிராம்
பழங்கள் 100 கிராம்
சர்க்கரை 25 கிராம்

தாய்ப்பாலை தவிர்த்து, பாலின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுக்கும்போது 200 மி.லி. பால் தேவைப்படும்.6-12 மாதங்களான இளங்குழவியின் உணவூட்டத்திற்காக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பல்வேறு உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வயதைப் பொருத்து உணவுத் தயாரிப்புகள் சிறப்பாக மாற்றி அமைக்க வேண்டும்.

இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்

ஒரே ஒரு உணவு மட்டும் தான், புதியதாக அறிமுகப்படுத்த வேண்டும்.ஆரம்பத்தில், புதிய உணவைக் குறைந்த அளவே கொடுக்க வேண்டும். குழந்தை விரும்ப ஆரம்பித்தால் சிறிது சிறிதாக அளவை அதிகரிக்க வேண்டும்.குழந்தையைக் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டக்கூடாது. குழந்தை ஏதாவது உணவை விரும்பவில்லையென்றால், அதை தொடராமல் வேறு உணவை அளிக்க முயற்சிக்க வேண்டும். அந்த உணவை 2-3 வாரங்கள் கழித்து கொடுத்து பார்க்க வேண்டும். குழந்தை தொடர்ந்து அந்த உணவை நிராகரித்தால், அந்த உணவுக்குப் பதிலாக வேறு உணவை மாற்றி அமைக்க வேண்டும்.

மசாலா நிறைந்த உணவைக் கொடுக்கக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.பல்வேறு மாற்றங்களைச் செய்து குழந்தையின் உணவைக் கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டியது அவசியம். குழந்தை ஒரு உணவை விரும்பி உண்ணத் தொடங்கியவுடன், அடுத்த புதிய உணவை ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதிய உணவு வகைகளை நாளடைவில் குழந்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கும். குழந்தை வளர, வகை உணவின் நிறம், மணம், தன்மை, வடிவம் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைக்கு நல்ல உணவுப் பழக்கங்களை உண்டுபண்ண, எல்லாவகையான உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் முன்னால், பெற்றோர் அவர்களுடைய உணவைப் பற்றிய சொந்த விருப்பு, வெறுப்புக்களை காட்டக் கூடாது.

குறைந்த விலை துணை உணவுகள்

பேறு காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு (feeding a preterm baby) 37 வாரங்களுக்கு முன்னதாகப் பிறந்த குழந்தைகள் (preterm) பேறுகாலத்திற்கு முன் பிறந்தவர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் கர்ப்பப்பையில் இருக்க வேண்டியக் காலத்தில் எத்தகைய வளர்ச்சி விகிதத்தை அடைந்திருப்பார்களோ, அதே அளவு வளர்ச்சி விகிதத்தை பெற உணவு அளிப்பதே, இவர்களுக்கு உணவு அளிப்பதன் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

வளர்ச்சி அதிகரிப்பு காட்டாத, பேறுகாலத்திற்குமுன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் வாரத்தில் சக்தி தேவை. 60கி.க/கி.கி உடல் எடை/தினம் ஆக இருக்கும். முதல் இருவாரங்கள் கழித்து, திருப்திகரமான வளர்ச்சிக்கு சக்தி தேவை. 120 -150 கி.க/கி.கி உடல் எடை/தினம் தேவைப்படும். எடையேற்றம் இல்லாத குழந்தைகள், அறுவை சிகிச்சையில் பிறந்தவர்கள் மற்றும் மிக மோசமான பிரிடெர்ம் குழந்தைகள் ஆகியோருக்கு கலோரிகள் மிக அதிகமாகத் தேவைப்படும்.

இவர்களுக்கு தேவைப்படும் திரவத்தின் அளவு முதல் வாரத்தில் அதிகமாக இருக்கும். 7 -10 நாட்களுக்கு திரவம் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு 90 -100 மி.லி/கி.கி உடல் எடை/தினம் என்ற அளவில் இருக்கும். ஒளி சிகிச்சை (photo therapy) அல்லது கதிரியக்க வெப்பமூட்டி (radiant Warmer) ஆகியவற்றில் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதலாகத்
திரவம் கொடுக்கப்பட வேண்டும்.

குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் லாக்டோஸை ஏற்றுக் கொள்வதில் சிரமப்படுவர். அவர்களுக்கு குளுகோஸ் பாலிமர் கொடுத்தால் ஏற்றுக் கொள்வர். இவர்களின் வேகமான உடல் வளர்ச்சிக்காக 3 – 4 கிராம் புரதம்/ கி.கி உடல் எடை தேவைப்படும். இவர்களுக்கு சிஸ்டின், டாரின், அலனைன் மற்றும் ஆர்ஜினின் போன்ற அமினோ அமிலங்கள் அவசியமாகும். இவை தாய்ப்பாலில் காணப்படுகின்றன.

குறைந்த பிறப்பு எடைக் குழந்தைகள் செறிவூட்டப்பட்ட டிரைகிளிசரைடுகளை சீரணிக்கவோ, தன்மயமாக்கவோ சிரமப்படுவர். தாவர எண்ணெய்களில் காணப்படும் செறிவூட்டப் படாத நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் இவர்களால் சுலபமாக தன்மயமாக்கிக் கொள்ளப்படும். இவற்றை விட மிதமான சங்கிலி டிரைகிளிசரைடுகள் சிறந்தது. செரித்தலுக்கும், உறிஞ்சுதலுக்கும் இவற்றிற்கு பித்த உப்புக்கள் அதிகமாகத் தேவைப்படுவதில்லை. ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கூடுதலாக தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைவு 6 – 12 வாரங்களில் ஏற்படலாம். எனவே 2.5 மி.கி/கி.கி உடல் எடை/தினம் என்ற அளவில் இரும்புச்சத்து 6 – 8 வாரங்கள் முதல் கொடுக்கப்பட வேண்டும். தாய்ப்பாலில் உள்ளதைவிடக் கூடுதலாக வைட்டமின்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

பிரிடெர்ம் குழந்தைகளுக்கு (Preterm) தாய்ப்பாலே சிறந்த உணவு. ஏனெனில் இத்தகைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு, தாய்ப்பாலில் இயற்கையாகவே, குழந்தைக்கு ஏற்ற வகையில் அதிக கலோரி, கொழுப்பு, புரதம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவுகள் உள்ளது. தாய்ப்பாலின் நுண்ணுயிரிகளை அழிக்கும் பண்பு இவர்களுக்கு அதிமுக்கியத் தேவையாகும். இவர்களின் எடையேற்றம் திருப்திகரமாக இல்லையென்றால் தாய்ப்பால் மட்டுமின்றி, கூடுதலாக சோள எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் கொடுக்கலாம். இவை உணவின் கனஅளவை அதிகப்படுத்தாமல் அதே சமயம் கலோரியின் அளவை அதிகரிக்கக் கூடியது. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் விலங்குகளின் பாலோ அல்லது செயற்கை பால் உணவுகளோ கொடுக்கப்படலாம்.

தொகுப்பு : சரஸ்

The post பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுகள் appeared first on Dinakaran.

Related Stories: