நீலகிரி மாவட்டத்திற்கு ஆர்கானிக் விவசாயத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

*சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு ஆர்கானிக் விவசாயத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் தேயிலை வாரியத்தின் சார்பில் தேயிலை தொழில் சார்ந்தோர் சந்திக்கும் சவால்கள் குறித்து விவசாயிகள், விற்பனையாளர்கள், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.

தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இன்ட்கோ சர்வ் முதன்மை செயல் அலுவலர் மோனிகா ரானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தேயி லை விவசாயிகள் சங்கம், உற்பத்தியாளர் சங்கம், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினரின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது:

இந்தியாவிலேயே சிறு தேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டம் தான். இங்கு 60 சதவீதம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு முடிவினை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தினரையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தேயிலை தூள் விற்பனை சந்தைகளில் சிறப்பாக செயல்பட தேயிலை தொழிற்சாலை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படுவதன் மூலம் அதிகபடியான லாபத்தினையும் தரத்தினையும் ஈட்ட முடியும். இக்கூட்டத்தில் தேயிலை விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தேயிலை விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள், தரமான இயந்திரங்கள், மானியம், உரம் போன்றவை வழங்க நடவடிக்கை தேயிலை வாரியம் மேற்கொள்ள வேண்டும். நல்ல தரமான தேயிலை எடுத்தால் தான் தரமான தேயிலை தூள் கிடைக்கும். இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதோடு விவசாயிகள், விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் என அனைவரும் நன்றாக இருக்க முடியும். உங்கள் அனைவருக்கும் எங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா மற்றும் தேயிலை இரண்டும் இரண்டு கண்களாக பார்க்கப்படுகிறது. இதனை கொண்டு தான் நமது மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பிற்கு சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதோடு மக்களின் வாழ்வாதரம் உயரும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள், மக்கள் குறைதீர்க்கும் நாள், மனுநீதி நாள் என இதுபோன்ற கூட்டங்கள் இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுமே உங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிவற்காக நடத்தப்படுகிறது.

சிறுதேயிலை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் வாயிலாக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அதற்கான வழிமுறை செய்து தரப்படும். மேலும் சிக்கிம் மாநிலத்தில்தான் முதன்முதலாக ஆர்கானிக் விவசாயம் கொண்டு வரப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லா அளவில் ஆர்கானிக் விவசாயத்திற்காக நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நமது மாவட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிக அளவில் தேயிலை விவசாயத்திற்காக ஒதுக்க திட்டமிடப்படவுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவிகளும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. சில விவசாயிகள் வட்டியில்லா கடனுதவிகள் கேட்டுள்ளனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2022-23ம் ஆண்டில் கலப்பட தேயிலை தூள் குறித்து பெறப்பட்ட புகார்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பதிவு செய்யப்பட்ட 11 கிரிமினல் வழக்குகளில் 6 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அபராத தொகையாக ரூ.1.62 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. கலப்பட தேயிலை தூள் உற்பத்தி குறித்து தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் சார்பில் அனைத்தும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
இக்கூட்டத்தில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்டத்திற்கு ஆர்கானிக் விவசாயத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: