திண்டிவனம் அருகே சோகம் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி பலி

திண்டிவனம் : திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்ற சென்னை மாணவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கோவிலம்பாக்கம் எம்ஜிஆர் நகர் 18வது தெருவை சேர்ந்தவர் ஹரி (19). இவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் கிருபாகரன் (17). இவர் நங்கநல்லூர் நேரு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இருவரும் திருவண்ணாமலை அடுத்த தென்கரும்புலூர் கிராமத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து பைக்கில் புறப்பட்டனர். பைக்கை ஹரி ஓட்டியுள்ளார்.

மேலும் இவர்களுடன் இரண்டு பைக்கில் நான்கு பேர் உட்பட ஆறு பேர் திருமண நிகழ்ச்சிக்கு உடன் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறம், ஹரி ஓட்டி சென்ற பைக் அதிவேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்து கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹரியை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே சோகம் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: