கோட்டியால் கிராமத்தில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

 

தா.பழூர், ஜூன் 7:தா.பழூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் உள்ளது நல்ல தண்ணி ஏரி. இந்த ஏரி அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஏரியில் குளிப்பவர்களுக்கு உடல் உபாதைகள் வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஏரி நீரை பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். ஆனால் மீண்டும் தற்போது ஏரியில் இருந்த மீன்கள் இறந்து அழுகிய நிலையில் மிதப்பது கடும் துர்நாற்றம் வீசுகிறது.

ஏரியை சுற்றி குடுயிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் மூக்கைபிடித்தபடி வாழும் நிலை உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாகவும், உணவு உண்ண முடியாத நிலை ஏற்படுகிறது. இறந்த மீன்களை பறவைகள் உண்ண எடுத்து சென்று வீடுகளில் போட்டு விடுகிறது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஆடு மாடுகளுக்கு வைக்கும் தண்ணீரிலும் இறந்த மீன்களை பறவைகள் போட்டு விடுகின்றன. இதனால் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வைக்கும் தண்ணீரை குடிக்கமுடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் நோய் தொற்று ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் மீன்களை அகற்றி நீரை வெளியேற்றி சுத்தமான நீரை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டியால் கிராமத்தில் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: