நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.6.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சென்னை, தேனாம்பேட்டை, விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக தலா 25 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 125 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப கட்டுதல், மருத்துவமனைகளின் சுகாதார நிலையங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி (7.5.2022) அன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புரங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை இருப்பதைப் போல நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி முதல்கட்டமாக, பெருநகர மாநகராட்சிகள் மற்றும் சென்னை நகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் என 500 மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 500 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் இம்மையம் செயல்படும். இந்நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் இப்பகுதியில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம், மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள் குறிப்பாக, குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் மருத்துவ வசதி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்பட்டு அனைத்து அத்தியாவசியமான ஆரம்ப சேவைகளை மக்கள் எவ்வித பொருட்செலவின்றி அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதோடு அல்லாமல் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார தேவைகளுக்காக மக்கள் தேவையின்றி அணுகும் சூழ்நிலையையும் குறைக்கிறது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மரு. கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மரு. நா. எழிலன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

The post நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! appeared first on Dinakaran.

Related Stories: