ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்; பாலியல் புகார் வழக்கில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன்..!!

சென்னை: பாலியல் புகார் வழக்கில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உட்பட்ட நாட்டியக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த புகாரின் பேரில், கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் கடந்த ஏப்ரல் 3ல் கைது செய்தனர்.

இவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். கோடை விடுமுறையின்போது அவசரகால வழக்குகளை விசாரிக்கும் சமயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். பின்னர் மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிபத்மன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம், உதவி பேராசிரியரான ஹரி பத்மனுக்கு ஏற்கனவே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும், இதனால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஹரிபத்மன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற ஹரிபத்மனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

The post ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்; பாலியல் புகார் வழக்கில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Related Stories: